சந்திரனில் நாசாவின் ஆய்வு மையம் !!!

சந்திரனில் நாசாவின் ஆய்வு மையம்

2025 இல் சந்திரனில் நாசாவின் கட்டுமானங்களும் பயணங்களும்...கற்பனை வடிவம் - படம் பிபிசி.நிலவில் வடதுருவத்திலோ அல்லது தென் துருவத்திலோ நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து அதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சந்திரனிலும் நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து, விஞ்ஞானிகளை சுழற்சி முறையில் அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. இதே விருப்பத்தை அமெரிக்க அதிபர் புஷ் கடந்த 2004ம் ஆண்டு தெரிவித்திருந்தார். இத்திட்டம் குறித்து புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா துணை நிர்வாகி ஷானா டேல் திங்கள்கிழமையன்று நிருபர்களிடம் கூறியதாவது:சந்திரனுக்கு தனித்தனியாக மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்வதை விட, அங்கு நிரந்தர மையம் அமைத்து ஆய்வு செய்வதுதான் சிறந்தது என நாசா விஞ்ஞானிகள் குழு முடிவு செய்துள்ளது. சந்திரனின் வடதுருவம் அல்லது தென்துருவத்தில் ஆய்வு மையம் அமையும். இப்பகுதியில் சூரிய வெளிச்சம் எப்போதும் நிரந்தரமாக இருக்கும்.


இதன் மூலம் ஆய்வு மையத்துக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் எளிதில் பெற முடியும். அதோடு இந்த இடத்துக்கு அருகில் நிரந்தர இருளான பகுதியும் உள்ளது. இங்கிருந்து ஐஸ்கட்டிகளை பெறமுடியும்.மின்சாரம், நீரை எளிதில் பெற வசதியாக சந்திரனின் துருவப் பகுதியில் ஆய்வு மையம் அமைக்கப்படும்.


இங்கிருந்து செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவது பற்றி ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும். சந்திரனில் முதல் முறையாக மனிதன் கால் பதித்து 48 ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேர் கொண்ட குழு சந்திரனுக்கு மேற்கொள்ளும் பயணம் 2020ம் ஆண்டில் தொடங்கும். இவர்கள் சில நாள் தங்கியிருந்து ஆய்வு மையம் அமைப்பதற்கான பணியில் ஈடுபடுவர். அதற்கு முன் ரோபோக்களை அனுப்பி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.சர்வதேச விண்வெளி மையத்தில் இப்போது, விஞ்ஞானிகள் நிரந்தரமாக தங்கியிருப்பது போல், 2024ம் ஆண்டிலிருந்து நிலவிலும் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு ஷானா டேல் தெரிவித்தார்.

0 மறுமொழிகள் to சந்திரனில் நாசாவின் ஆய்வு மையம் !!! :