' கோயம்பேடு "


தமிழ்.நாட்டின் தலைநகரம் சென்னையில் அமைந்துள்ள பஸ் நிலையம் , காய்கறி மார்க்கெட் பகுதியான் ' கோயம்பேடு ' முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் .இன்று ' கோயம்பேடு ' ஒரு மாபெரும் நகரத்தின் குறியீடாக , பல்வேறு அடுக்கு மாடி குடியிருப்புகள் , சந்தைகள் , கடைகள் , போக்குவரத்து நிலையங்கள் என்று உருமாறி இருந்தாலும் , இங்கே மகத்தான வரலாற்று மற்றும் புராணச் சிறப்புகள் புதைந்து கிடப்பதன் மவுன சாட்சியாக பல யுகங்களாய் நிமிர்ந்து நிற்கிறது குறுங்காலீஸ்வரர் கோயில் இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் அற்புதமான 14 தமிழ் கல்வெட்டுக்கள் அதன் சரித்திரத்தை நமக்கு அழகாக உணர்த்துகின்றன . கல்வெட்டுக்கள் மட்டுமல்ல , அருணகிரிநாதரின் திருப்புகழ் வழியாகவும் ,வால்மீகி முனிவரின் ராமாயணம் வழியாகவும் இக்கோயிலின் புராண வரலாறு நமக்குத் தெரிய வருகிறது .அக்காலத்தில் கோயம்பேடு , கோசை நகர் ,குசலவரி , குசலவபுரம் , பிராயச்சித்தபுரம் , கோயட்டிபுரம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டது .


ஒரு காலத்தில் அடர்ந்த கானகமும் , கொடிய விலங்குகளும் திரிந்த இந்தப் பகுதியைச் சீர் செய்து ஆசிரமம் அமைத்தார் மாமுனி வால்மீகி என்று சொல்கிறது புராண வரலாறு . கோயம்பேடு கானகத்தில் தனித்து விடப்பட்ட சீதாப்பிராட்டியாரை மீட்டு , பாதுகாப்பு அளித்த வால்மீகி முனிவர் , அங்கே சீதா பிராட்டியார் பெற்றெடுத்த லவ , குச சகோதரர்களுக்கு கல்வி அறிவையும் , வேறு பல வித்தைகளையும் கற்றுக்கொடுத்தார் .


அப்போது நிகழ்ந்த போரில் ராமபிரானுக்கே அவருடைய மகன்களை வால்மீகி அறிமுகம் செய்து வைத்தார் என்கிறது ராமாயண புராணம் . அப்படிப்பட்ட புராதன சிறப்புகள் நிகழ்ந்த பகுதிதான் இன்றைய கோயம்பேடு . இந்த கோயிலுக்கு குலோத்துங்க சோழன் , விஜயநகரப் பேரரசர் வீரபுக்கராயர் மற்றும் பல்லவர்கள் திருப்பணி செய்ததும் வரலாற்றுச் செய்திகள்தான் .

0 மறுமொழிகள் to ' கோயம்பேடு " :