1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் !!!

1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் -- இந்திய விஞ்ஞானிகள் சாதனை .


ஏழை நோயாளிகளுக்கு மிகவும் உதவும் வகையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான செயற்கை இதயத்தை கரக்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் .


மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் ஐஐடியில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்தியாவிலேயே முதல் முறையாக செயற்கை இதயத்தை உருவாக்கியுள்ளது . விலை மதிப்பில்லாத உயிரை காக்கும் இதன் விலை ஒரு லட்ச ரூபாய் மட்டுமே . சோதனை முறையில் தாயாரிக்கப்பட்ட இந்த இதயம் விலங்குகளுக்கு வைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது . இதில் விலங்குகள் இயல்பாக இருந்தது தெரியவந்ததால் சோதனை வெற்றிபெற்றது . 13 அறைகள் கொண்ட இந்த இதயம் அடுத்து மனிதர்களிடம் சோதித்து பார்க்கப்படவேண்டியது தான் பாக்கி . ஆனால் இதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலிடம் முறைப்படி அனுமதி பெறவேண்டும் .


இதய நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி , ஸ்டன் ட் , பைபாஸ் அறுவை சிகிச்சை என பல முறைகள் இப்போது நடைமுறையில் உள்ளன . ஆனால் இதய தசைகள் பலவீனமானவர்களுக்கு இது எதுவுமே பயன்தராது . இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் உயிர் பிழைக்க ஒரே வழி . அல்லது செயற்கை இதயங்களை பொருத்தலாம் . அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் செயற்கை இதயங்கள் 30 லட்சம் ரூபாய் விலை கொண்டது . மேலும் அவற்றின் நம்பகத்தன்மையும் குறைவு . ஆனால் ஒரு லட்ச ரூபாய் விலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சுதேசி இதயம் எந்தக்குறைபாடும் இல்லாமல் செயல்படக்கூடியது என்று இதைத் தயாரித்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .


ஒரு லட்ச ரூபாய் விலையிலான நானோ காரை தயாரிக்கும் வாய்ப்பை வங்காளம் இழந்தாலும் அதே விலையில் இதயத்தையே உருவாக்கி சாதனை படைத்துவிட்டது என்று இத்திட்டத்தில் பங்கு வகித்த ஒரு விஞ்ஞானி கூறினார் .

0 மறுமொழிகள் to 1 லட்ச ரூபாய்க்கு செயற்கை இதயம் !!! :