வெளிநாட்டு வாழ்க்கை - கவிஞர் பனித்துளி சங்கர் கவிதை - Foreign life Tamil Kavithai - Panithuli shankar Poem

3வெளிநாட்டு வாழ்க்கை !                             


முகவரி தெரியாத பயணம் போலத்தான்
இந்த வெளிநாட்டுப் பயணமும்
நாங்கள் அடகு வைக்கப்படுகின்றோமா அல்லது
நிரந்தரமாய் விற்கப்படுகின்றோமா என்பது
புரியாத புதிர்தான் !...


எங்கோ வேற்றுக் கிரகம் வந்துவிட்டோமோ என்ற
அச்சத்தை பேசத் தெரிந்தும்
பேசாமல் செல்லும் மனிதர்கள் இங்கே
தந்துவிட்டு செல்கிறார்கள் !...

பாவம் என் அம்மா பேசக் கற்றுக்கொடுத்தார் ஆனால்
இங்கு வந்து எப்படி ஊமையானேன்!.
என்ன செய்ய
திரும்பும் திசையெங்கும் புரியாத மொழிகள் !..

ஒருவழியாக வாழ்கையின் அதிசயங்களை
கற்றுத் தரப்போகும் தங்கும் அறை என்று சொல்லும்
கோழிக் கூண்டுக்குள் வந்து சேர்ந்துவிட்டேன் !...

முதல் இரவின் விடியல்
எனது அறையில் இருபதுக்கும் அதிகமான
மாறுபட்ட இசை கச்சேரியுடன் தொடங்கியது
( செல்போன் அலாரங்களைத் தான் சொன்னேன் )

மூன்று மணிக்கு எழுந்து
ஐம்பது நிமிடங்கள் வரிசையில் நின்று
இருபது நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு
காலைக் கடன்களை முடித்து
கிடைத்தும் கிடைக்காத காய்ந்த ரொட்டிகளை
கைகளில் ஏந்திக்கொண்டு கிளம்புவதற்காக வேகமாய்
ஹாரன் எழுப்பும் வாகனத்தை நோக்கி
மின்னல் வேகத்தில் ஓடிவந்து ஏறி
எங்கோ ஓரத்தில் கொஞ்சமாய் கிடைத்த இருக்கையில்
உடம்பின் பாதி பாகத்தை அமர்த்தி
வாங்கிய பெரும் மூச்சில் உணர்ந்தேன்
படிப்பின் அருமையை !....

ஒருவார வேலை களைப்பிற்கு
வார விடுமுறையும் மெல்ல அறிமுகமானது
அப்போது ஒரு அலைபேசி அழைப்பு
ஹலோ எப்படி இருக்கீங்க!? எங்கே இருக்கீங்க !?
நாங்க நாளைக்கு உங்களைப் பார்க்க வருகிறோம் என்று
உள்ளுக்குள் மகிழ்ச்சி நிரப்ப
இடமில்லாமல் இருந்தது அப்பொழுது !

ஆஹா !
என்னையும் பார்க்க இத்தனை உறவுகளா என்று
வியப்போடு புன்னகைத்தேன்
பின்புதான் தெரிந்தது எல்லாம் அவர்களுக்கு
கொடுத்து அனுப்பிய பொருட்களை
வாங்க வந்தவர்கள் என்று !...

அழுகை வந்தும் அதை
போலி சிரிப்பிற்குள் புதைத்துக்கொண்டேன் .....

வந்து ஒரு மாதம் கூட இன்னும் முடியவில்லை
அதற்குள் கடன் கொடுத்தவர்களின் அலைபேசி அழைப்புகள்
என்னப்பா பணம் வாங்கி ரொம்ப நாளாச்சு என்று !

இதற்கிடையில் மனைவியின் அன்பான உபசரிப்போடு
மெல்லத் தொடங்கிய இன்ப அதிர்ச்சி
மாமா நீங்க அப்பாவாகப் போறீங்க என்று ..
எப்படி சொல்வதென்று தெரியவில்லை
ஆனந்தத்தின் ஆரவாரத்தை !...

காலங்களும் ஓடியது
கடனைக் கட்டி முடிக்கவே பல வருடங்கள் கழிந்தது
மீண்டும் மனைவியின் பல அழைப்புகள்
என்னங்க பையனை பள்ளியில் சேர்க்கப்போறேன் ,
என்னங்க பையன் பத்தாம் வகுப்பு படிக்கப்போறான் ,
என்னங்க பையன் கல்லூரியில் சேரனுமாம் இப்படி
தேவைகளின் பட்டியல் நான் வீடு திரும்ப வேண்டும்
என்ற எண்ணத்தையே அடியோடு நீக்கியது
என் மனதில் இருந்து !....

தங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்காக
சொத்துக்களை இழந்த தந்தைகள் சிலர் ஆனால்
அதே குழந்தைகளின் வளர்ச்சிக்காக
வாழ்க்கையே தொலைத்த
என்னைப் போன்ற தந்தைகள் பலர் !.....

                                            - கவிஞர் பனித்துளி சங்கர் .
,
,
,
,
,
,
,
,,

,
மேலும் வாசிக்க.. >>