பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???

ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான்.

வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

அப்பொழுது அவன் முன்பு சாவுக்கான எமன் தோன்றினான்.

அவனிடம் "உன் உயிரை எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன்" என்றான்.

அழுது புலம்பிய அவன் தன் நிலையை எமனிடம் உருக்கமாகச் சொன்னான். "இன்னும் என்னை மூன்றே மூன்று நாட்கள் வாழவிட்டால் தான் சேர்த்து வைத்திருக்கும் பொற்காசுகளில் பாதியைத் தருகிறேன்" என்றான்.

"அதெல்லாம் முடியாது" என்றான் எமன்.

"இந்த ஐயாயிரம் பொற்காசுகளைச் சேர்க்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். இதனால் மகிழ்ச்சியை எல்லாம் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த ஒரு நாள் மட்டும் என்னை வாழவிடு. இந்தப் பொற்காசுகள் அனைத்தையும் எடுத்துக் கொள்" என்று கெஞ்சினான்.

"உன் பொற்காசுகள் ஏதும் எனக்கு வேண்டாம். நீ கெஞ்சிக் கேட்பதால் உனக்குச் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன். இன்றியமையாத வேலை ஏதேனும் இருந்தால் செய்து முடித்துக் கொள்" என்றான் எமன்.

அந்தக் கருமி " உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழியுங்கள். பணம் சேர்த்து வைப்பதை நல்வினை என்ரு நினைக்காதீர்கள். ஐந்தாயிரம் பொற்காசுகளால் என் வாழ்நாளை ஒருநாள் கூட நீட்டிக்க முடியவில்லை." என்று எழுதி இந்தப் பொன்மொழியை முடிந்தவரை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் என்ரு அடியில் ஒரு சிறு குறிப்பையும் எழுதினான்.

நீங்களும் இதை உங்களுக்குத் தெரிந்த பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று இருப்பவர்களிடம் தெரிவிக்கலாமே...?


0 மறுமொழிகள் to பணம் மட்டும்தான் வாழ்க்கையா ??? :