நேரு எழுதிய உயில் !!!

' கையளவு அஸ்தி , கங்கையில் கலக்கப்பட வேண்டும் '


நேரு எழுதிய உயில் ...


" என் மறைவுக்குப் பிறகு எனக்காக மதச்சடங்குகள் எதுவும் செய்யப்பட வேண்டாம் என்று அறிவிக்க விரும்புகிறேன் . நான் இறந்த பிறகு என் உடலைத் தகனம் செய்துவிட வேண்டுமென்று விரும்புகிறேன் . அயல்நாட்டில் நான் மரணமடைந்தால் , அங்கேயே தகனம் செய்யப்பட்டு அஸ்தி , அலகாபாத்திற்கு அனுப்பப்பட வேண்டும் . ஒரு சிறிய கையளவு அஸ்தி கங்கையில் கலக்கப்பட வேண்டும் . இதற்கு காரணம் , இளம் பிராயத்திலிருந்தே அலகாபாத்தில் கங்கை , யமுனை நதி தீரங்களிடம் எனக்கு ஓர் பற்று உண்டு . நான் வளர வளர இந்தப் பற்றும் வளர்ந்து வந்திருக்கிறது . இந்தியாவின் தொன்மை மிக்க பண்பாட்டிற்கும் , நாகரிகத்திற்கும் இடையறாமல் மாற்றங்கண்ட போதிலும் , நிரந்தரமான நீர்பெருக்குடன் என்றும் ஒன்று போலவே பொலியும் கங்கை ஒரு சின்னமாகத் திகழ்கிறது.


கங்கையின் நினைவு பழங்காலப் பெருமையையும் , நீரோட்டம் நிகழ்காலத்தையும் , பெருங்கடலை நோக்கிச் செல்லும் சங்கம யாத்திரை வருங்காலத்தையும் எனக்கு உணர்த்துகின்றன .


எனது இந்த அபிலாஷைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் இந்தியக் கலாச்சாரத்திற்கு எனது கடைசி அஞ்சலியாகவும் என் அஸ்தியின் ஓர் பகுதி அலகாபாத்திலுள்ள கங்கையில் கரைக்கப்பட வேண்டும் . அதன் மூலம் இந்தியக் கரையோரங்களைத்தொடும் பெருங்கடலில் அது சங்கமமாக வேண்டுமென்ற வேண்டுகோளை விடுக்கிறேன் . எனது அஸ்தியின் பெரும் பகுதி , ஓர் விமானத்தின் மூலம் உயரே எடுத்துச் செல்லப்பட்டு , இந்திய வயல் புறங்களில் தூவப்பட வேண்டும் . அது இந்திய மண்ணோடு மண்ணாக கலந்து அதிலிருந்து பிரிக்க முடியாத வண்ணம் ஒன்றுபட வேண்டும் . "


இதுவே நேரு எழுதிய உயிலில் உள்ள முக்கிய விபரமாகும் . சுதந்திரத்துக்கு 30 ஆண்டுகளும் , சுதந்திரத்திற்குப்பின் 17 ஆண்டுகளும் தாய்நாட்டுக்கு உழைத்தார் . இந்தியா வரலாற்றில் அந்த தியாக வரலாறு , 1964 மே 27 -ம் தேதி முடிவடைந்தது .

0 மறுமொழிகள் to நேரு எழுதிய உயில் !!! :