பிரசவித்த அமெரிக்க ஆண்!


பெண் குழந்தையைப் பிரசவித்த அமெரிக்க ஆண்!


லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் ஓரிகான் மருத்துவமனையில், பெண்ணாக இருந்து பின்னர் ஆணாக மாறியவருக்கு அழகான பெண்

குழந்தை பிறந்துள்ளது.
அந்த அதிசய பிறவியின் பெயர் தாமஸ் பீட்டி. இவருக்கு 34 வயதாகிறது. இயற்கையில் பெண்ணாக பிறந்தவர்தான் தாமஸ் பீட்டி. ஆனால் பின்னர் ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைச்சிகிச்சை மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறி விட்டார். ஆணாகவே தற்போது வாழ்ந்தும் வருகிறார்.


இவருக்கு அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவை நடந்த போதிலும் இவரிடம் பெண்ணுக்குரிய இனப்பெருக்க உறுப்புகள் அப்படியேதான் இருந்தன. இந்த நிலையில் செயற்கை கருவூட்டல் மூலம் கருத்தரித்தார் தாமஸ் பீட்டி.


இன்னொருவரின் விந்தை எடுத்து, தாமஸ் பீட்டியின் கரு முட்டைகளுடன் சேர்த்து கருத்தரிக்கப்பட்டது. கர்ப்பமடைந்த தாமஸ் பீட்டிக்கு ஜூன் 290ம்தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தாமஸும், சேயும் நலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாம். இயற்கையான முறையில் பிரசவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது தாமஸுக்கு இருக்கும் ஒரே பெரிய வருத்தம் என்னவென்றால், குழந்தைக்கு பால் கொடுக்க முடியாதே என்பதுதானாம்.


கடந்த ஏப்ரல் மாதம்தான் தான் ஆணாக மாறியது எப்படி என்பதை ஓப்ரா வின்பிரே ஷோவில் விளக்கியிருந்தார் தாமஸ்.
2 ஆண்டுகளுக்கு முன்புதான் குழந்தை பெறும் ஆசை வந்தது தாமஸுக்கு. இதையடுத்து மாதந்தோறும் இருமுறை எடுத்துக் கொள்ளும் ஹார்மோன் ஊசியை நிறுத்தினார். இதையடுத்து அவருக்கு மாத விடாய் சுழற்சி திரும்ப வந்தது.


பீட்டிக்கு ஒரு மனைவியும் உண்டு. அவரது பெயர் நான்சி (46). ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் நான்சியை மணந்தார் பீட்டி. அவருக்கு கருத்தரிக்க முடியாமல் போய் விட்டது. அதனால்தான் மனைவிக்காக பீட்டி கர்ப்பமடைந்தாராம்.


நான்சிக்கு முதல் திருமணம் மூலம் 2 பெரிய மகள்கள் இருக்கிறார்களாம்.


குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறீர்கள் என்று ஷோவின்போது வின்பிரே கேட்டபோது, வழக்கம் போலத்தான். அவர்தான் தந்தையாக இருப்பார். நான் தாயாக இருப்பேன் என்று கூறினார் நான்சி.


தாமஸ் பேசாமல் தனது பெயரை 'தாயுமானவன்' என்று மாற்றிக் கொள்ளலாம்!

0 மறுமொழிகள் to பிரசவித்த அமெரிக்க ஆண்! :