வெற்றிக்கு வழி எப்படி !!!

‘‘சார், குமுதம் ஆபீஸஸுக்கு எப்படிப் போகணும்?’’ இப்படியரு கேள்வி வந்தால், எளிதாக பதில் சொல்லிவிடலாம்;

‘‘கெல்லீஸ் கார்னர்ல திரும்பி நேராப் போனீங்கனா ஒரு பெரிய பில்டிங் வரும். அதான்’’ என்று.


ஆனால், வெற்றிக்கு வழி எப்படி என்று கேட்டால் இப்படி சட்டென்று பதில் சொல்லிவிட இயலாது.

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் போவோம். இரண்டு நூற்றாண்டுகளாகச் சொல்லப்படும் மாவீரன் நெப்போலியன் பற்றிய வரலாற்றுக் கதைகளில் ஒன்று இது.நெப்போலியன் எல்பா தீவில் பதுங்கியிருந்த காலம்... அவனுடைய சாம்ராஜ்யம் கை நழுவிப் போயிருந்தது. பதினெட்டாம் லூயி அரியணையைப் பிடித்திருந்தார். நெப்போலியனை ஒழித்துக் கட்டுவது என்ற முடிவிலிருந்தார். அவருக்கு ஆதரவாக பல ஐரோப்பிய நாடுகள். நெப்போலியனோடு ஆயிரம் விசுவாசமான வீரர்கள் மட்டுமே.


தொண்ணூறு நாட்களுக்கு மேல் நெப்போலியனால் தீவில் பதுங்கி இருக்க இயலவில்லை. போரிட்டு அரியணையைக் கைப்பற்ற வேண்டும் என்று அவன் மனது துடிதுடித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையே, அவனுக்கு ஒரு செய்தி வருகிறது, அவனை வீழ்த்த பெரும் படையுடன் பாரீஸ் நகரிலிருந்து ஒரு தளபதி வந்து கொண்டிருக்கிறார் என்று. நெப்போலியன் அஞ்சவில்லை. தன்னுடைய ஆயிரம் பேர் படையுடன் பாரீஸ் நகரை நோக்கிக் கிளம்பினான். இரு படைகளும் சந்திக்கும் இடம் நெருங்கியது. ஒரு பெரும் போருக்கான சூழல் அங்கே உருவாகியது.


நெப்போலியன் நிதானித்தான். சிந்தித்தான். தனது படைகளை அங்கேயே நிறுத்திவிட்டு தான் மட்டும் ஒரு குதிரையில் ஏறி எதிரிப்படைகளைச் சந்திக்கக் கிளம்பினான். பல்லாயிரக்கணக்கான படைகளைச் சந்திக்க தனியாளாய் குதிரையில்... ஆச்சர்யமாயிருக்கிறதல்லவா? அதுதான் நெப்போலியன். அவன் போட்ட கணக்குகள் வேறு. அவனுக்குத் தெரியும் அவனுடைய சின்ன படையுடன் எதிரிகளை எதிர்கொள்வது தற்கொலைக்குச் சமம் என்று. அதற்காக அவன் மனதில் வேறொரு வியூகம் வகுத்தான்.


எதிரிகள் முகாமுக்குள் தனியாளாய் ஒற்றைக் குதிரையில் வந்த நெப்போலியனைப் பார்த்ததும் படைவீரர்களுக்கு ஆச்சரியம். அதிர்ச்சி. அவனைப் பிடிக்க வேண்டும்; சிறையில் அடைக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. எல்லோரும் மெய்மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குதிரையின் மீது கம்பீரமாய் அமர்ந்து, தனது கணீர்க் குரலில் பேசத் துவங்கினான் நெப்போலியன். ‘‘இதோ உங்கள் சக்ரவர்த்தி வந்திருக்கிறேன். என்னைக் கொல்ல வேண்டுமென்றால் இப்போதே இங்கேயே கொன்று விடுங்கள். அல்லது உங்கள் சக்ரவர்த்தியான என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்’’ என்று அறைகூவல் விடுத்தான்.


நெப்போலியனின் துணிச்சலையும் சாதுர்யமான பேச்சையும் கேட்டு படைவீரர்கள் மலைத்து நின்றார்கள். யாருக்கும் அவனை எதிர்க்கத் துணிவில்லை. அவர்கள் எல்லோருமே அவன் மன்னனாய் இருந்த போது அவன் கட்டுக்குள் இருந்தவர்கள்.


இறுதியில் என்னாயிற்று தெரியுமா? அத்தனை படையினரும் நெப்போலியன் பின்னே அணிவகுத்து நின்றார்கள். அவன் சொற்படி கேட்டார்கள். அவர்களை வழிநடத்தி வந்த தளபதியை ஓரம் கட்டிவிட்டு நெப்போலியனின் வீரர்களானார்கள். அந்தப் படையினரையும் சேர்த்துக் கொண்டு பாரீஸ் நகரைக் கைப்பற்றி முடி சூடினான் நெப்போலியன் என்பது வரலாறு.


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நெப்போலியனின் இந்த வெற்றிக்கு என்ன காரணம்?

தனியாளாய் எதிரி முகாமுக்குள் நுழைந்த அவன் துணிச்சலா?

ஆயிரம் பேருடன் போரிட்டால் தோல்விதான். அதற்குத் தனியாளாய் போய் அவர்களைத் திகைக்க வைப்பது சிறந்தது என்று எண்ணிய அவன் புத்திசாலித்தனமா?

படைவீரர்களை மயக்கிய அவனது பேச்சுத் திறமையா?


இதையெல்லாம் சாதிக்க முடியும் என்ற அவனது அசாத்திய தன்னம்பிக்கையா?


இதுதான் வெற்றியில் பிரச்னை.


வெற்றிக்கு வழி என்று ஒரே ஒரு வழியைச் சுட்டிக் காட்ட இயலாது. வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு பல நேரங்களில் பல வழிகள் உதவியிருக்கின்றன. ஒரே சமயத்தில் பல வழிகளில் பயணித்து வெற்றி இலக்கை அடைந்திருக்கிறார்கள்.

பில்கேட்ஸ் முதல் பீத்தோவன் வரை பல வெற்றிக் கதைகளை இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். மேற்கத்திய சாதனையாளர்களிலிருந்து நம்ம லோக்கல் சாதனையாளர்கள் வரை எல்லோருடைய அனுபவங்களையும் கேட்கப் போகிறோம் அவர்களின் பிரமாண்ட வெற்றிகளுக்கான காரணங்களையும் அவர்கள் பயணித்த வழிகளையும் படிக்கப் போகிறோம்.

இன்னொரு சின்ன சம்பவம்.ரைட் சகோதரர்கள் யார் என்று கேட்டால், சட்டென்று சொல்லி விடுவோம் விமானத்தைக் கண்டுபிடித்த வித்தகர்கள் என்று. சரி, சாமுவேல் பி. லாங்லே யார் என்று கேட்டால் என்ன செய்வோம்? விட்டத்தைப் பார்ப்போம். நெற்றியைச் சுருக்கி தலையைச் சொறிந்து அசட்டுச் சிரிப்பு சிரித்து, ‘தெரியலையே, யார் அது?’ என்போம். பாவம், அவரும் கிட்டத்தட்ட விமானத்தைக் கண்டுபிடித்தவர்தான். ஆனால், சரித்திரத்தில் அவர் பெயர் இடம் பெறவில்லை. ஆர்வில், வில்பர், ரைட் சகோதரர்களின் பெயர்கள்—தான் விமானக் கண்டுபிடிப்பாளர்கள் என்று இடம் பெற்றிருக்கிறது.


காரணம்...ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்க சோதனைகள் செய்து கொண்டிருந்த காலத்தில்தான் பேராசிரியர் லாங்லேயும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார். சொல்லப் போனால், அவர்களைவிட லாங்லே சிறப்பாகப் படித்தவர். கணிதமும் வானவியல் சாஸ்திரமும் அவருக்கு அத்துப்படி. விமான ஆராய்ச்சிக்காக அவர் பணிபுரிந்த ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்டே பெரும் பணம் கொடுத்திருந்தது. லாங்லேயும் மிகச் சிறப்பாக ஆராய்ச்சிகள் செய்து ஏறத்தாழ ஒரு விமானத்தை உருவாக்கி விட்டார். ஆளில்லாத விமானத்தைப் பறக்க வைத்தும் காட்டினார். ஆனால், விமானியுடன் பறக்க அவர் தயாரித்திருந்த விமானம் தண்ணீருக்குள் விழுந்தது. விமானம் பறக்கப் போவதை வேடிக்கை பார்க்க வந்திருந்த மக்களெல்லாம் கேலியாய்ப் பார்க்க, பத்திரிகைகள் விமர்சனம் செய்ய... லாங்லேயால் தாங்க இயலவில்லை. இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு இன்னொரு முறை அதே போன்று விமானத்தை விமானியுடன் பறக்க வைக்க முயன்றார். இந்த முறையும் தோல்வி. கேலியும் விமரிசனங்களும் அதிகமாய் வர, மனம் நொந்தார் லாங்லே. பல வருடங்களாய் தான் செய்து வந்த ஆராய்ச்சிகளையெல்லாம் விமர்சனங்களுக்குப் பயந்து மூட்டை கட்டி வைத்தார். முயற்சிகளை கைவிட்டார். விமான ஆராய்ச்சியே தனக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்.


இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே ரைட் சகோதரர்கள் விமானத்தில் பறந்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார்கள். அவர்களும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லை. பல முயற்சிகள், பல தோல்விகள், பல பாடங்கள். ஆனால், தளரவில்லை; முயற்சிகளைக் கைவிடவில்லை. அதற்கு பலன், இன்று அவர்களது பெயரை உலகம் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.


இதில் இன்னுமொரு பரிதாபமான விஷயம் இருக்கிறது. லாங்லே தயாரித்த விமானத்தைப் போலவே சில வருடங்கள் கழித்து ஒரு விமானம் தயாரித்தார்கள். அந்த விமானம் பறந்தது. லாங்லே தரையிலிருந்து விமானத்தைப் பறக்க விட முயற்சிக்காமல் ஒரு பெரிய படகின் மேல் இருந்து பறக்க முயற்சி செய்தார். அதனாலேயே அது செயல்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் பிறகு கூறினார்கள்.


அன்று, லாங்லே மட்டும் விடாமல் தொடர்ந்து முயற்சித்திருந்தால்... முயற்சித்திருந்தால்...?

யெஸ்... முயற்சி... வெற்றிக்கான வழிகளில் மிக முக்கியமானது.

0 மறுமொழிகள் to வெற்றிக்கு வழி எப்படி !!! :