இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் !!!

எங்கிருந்து வருகிறது என்பது எதிரி நாட்டுக்குத் தெரியாமலேயே அந்த எதிரி நாட்டில் உள்ள இலக்குகளைத் தாக்கி நிர்மூலம் செய்யக்கூடிய சக்திமிக்க ஆயுதம் இருக்க முடியுமா? அதுதான் உலகின் எந்த மூலையிலிருந்தும் அணுஆயுத ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாகும். இதை பிரும்மாஸ்திரம் என்றும் வர்ணிக்கலாம். இந்தியா இப்போது இவ்விதமான நீர்மூழ்கிக் கப்பலை (சப்மரீன்) உருவாக்கியுள்ளது. அது அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது.


உலகில் இப்போது அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளிடம் மட்டுமே அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. இப்போது இந்தியாவும் இவ்வகை சப்மரீனைத் தயாரித்துள்ளது. இதை உருவாக்க இந்தியா பெரும்பாடுபட்டது என்று சொல்லலாம்.


டீசல் எஞ்சின் மூலம் இயங்கும் சாதாரண சப்மரீன்களைக் கட்டுவது என்பது எளிது. ஆனால் அணுசக்தியால் இயங்கும் சப்மரீனைக் கட்டுவது என்பது எளிதல்ல. இந்தியா டீசலினால் இயங்கும் சப்மரீன்களை ஏற்கெனவே தயாரித்து வருகிறது. டீசல் சப்மரீன்களை வெளிநாடுகளிடமிருந்து விலைக்கு வாங்க இயலும். ஆனால், அணுசக்தி சப்மரீன்களை எந்த நாடும் விற்பது கிடையாது. அதைத் தயாரிப்பதற்கு உதவி அளிப்பதும் கிடையாது. ஆகவே இந்தியா சொந்தமாக அணுசக்தி சப்மரீனை வடிவமைத்துத் தயாரிக்க வேண்டியதாயிற்று.


டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட சப்மரீன்களால் தொடர்ந்து பல நாள்கள் நீருக்குள் மூழ்கியபடி செல்ல இயலாது. ஏனெனில் அடிக்கடி டீசலை நிரப்பியாக வேண்டும். நீருக்குள் இருக்கும்போது டீசல் எஞ்சின் இயக்கப்படுவதில்லை. அது சத்தம் எழுப்பும். அதன் காரணமாக அது இருக்கின்ற இடத்தை எதிரி சப்மரீனால் கண்டுபிடித்து எளிதில் தாக்க இயலும்.


இரண்டாவதாக டீசல் எஞ்சின் இயங்குவதற்கு காற்று அதாவது ஆக்சிஜன் தேவை. ஆகவே, மேலே வந்து நீரில் மிதந்த நிலையில் டீசல் எஞ்சின்கள் இயக்கப்பட்டு பாட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பின்னர் நீருக்குள் மூழ்கிய நிலையில் பாட்டரி மூலம் - மின்சாரம் மூலம் சப்மரீன் செயல்படும். இக் காரணத்தால் இந்த வகை சப்மரீன்கள் டீசல் - எலக்ட்ரிக் சப்மரீன் என்று அழைக்கப்படுகின்றன. எதிரியால் கண்டுபிடிக்க முடியாத வகையில் அதனால் இயங்க இயலாது.


அணுசக்தி சப்மரீன் இந்த வகையில் மேலானது. இந்த சப்மரீனில் அணுசக்திப் பொருள் அடங்கிய அணு உலை ஒன்றைப் பொருத்திவிட்டால் போதும். மறுபடி 10 அல்லது 30 ஆண்டுகளுக்கு எரிபொருள் பிரச்னையே இராது. அணுசக்தி சப்மரீன் ஒன்றினுள் போதுமான உணவுப் பொருள் இருக்குமானால் அது தாய்த் துறைமுகத்துக்கு வராமல் நீருக்குள் இருந்தபடி உலகைப் பலமுறை சுற்றி வரலாம். அணுசக்தி சப்மரீன் நீருக்குள் இயங்கும்போது ஒலி எழுப்பாது.


அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலை இயங்குவதற்கு காற்று தேவையில்லை. எனவே நீருக்கு அடியிலிருந்து வெளியே தலைதூக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீருக்குள் கடலுக்குள் எங்கிருக்கிறது என்பதை அனேகமாகக் கண்டுபிடிக்க இயலாது.


அணுசக்தி சப்மரீனில் 12 நீண்ட தூர ஏவுகணைகள் இடம்பெறும். இவை ஒவ்வொன்றின் முகப்பில் பல அணுகுண்டுகளைப் பொருத்த முடியும். இந்த சப்மரீன் அட்லாண்டிக் கடல், பசிபிக் கடல், இந்துமாக் கடல் என உலகின் எந்த ஓர் இடமாக இருந்தாலும் அங்கே இருந்தபடி எதிரி நாட்டை நோக்கி அணுகுண்டு பொருத்தப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.
அமெரிக்கா, ரஷியா முதலான நாடுகளிடம் உள்ள அணுசக்தி சப்மரீன்கள் 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுத ஏவுகணைகளைப் பெற்றுள்ளன.இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீனில் இப்போதைக்கு 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளே இடம் பெறும். எதிர்காலத்தில் மேலும் அதிக தொலைவு செல்லும் ஏவுகணைகள் இடம்பெறலாம்.இந்தியா அணுசக்தி சப்மரீனை உருவாக்க சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகின. பல பிரச்னைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததே இதற்குக் காரணம். மின்சார உற்பத்திக்கான அணுஉலைகளை உருவாக்குவதில் இந்தியாவுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆனால் மின்சார நிலையங்களுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. சப்மரீனுக்கான அணு உலைகளை வடிவமைப்பது வேறு. மின்சார நிலையங்களுக்கான அணு உலைகள் வடிவில் பெரியவை. பொதுவில் அணு உலைகள் கடும் கதிர்வீச்சை வெளிப்படுத்துபவை.


இக் கதிர்வீச்சு ஆபத்தானவை. பெரிய அணுமின் நிலையங்களில் அணு உலையிலிருந்து கதிர்வீச்சு வெளிப்படாதபடி தடுக்க கனத்த சுவர்கள் இருக்கும்.இவற்றுடன் ஒப்பிட்டால் அணுசக்தி சப்மரீனில் இடம்பெறுகின்ற அணு உலையானது வடிவில் சிறியதாகவும் சக்திமிக்கதாகவும் உள்ளது. சப்மரீனில் பணியாற்றுகின்ற ஊழியர்களை கதிர்வீச்சு தாக்காதபடி சிறப்பான பாதுகாப்பு உள்ளது.சப்மரீனில் இடம்பெறும் அணு உலையில் பயன்படுத்தப்படுகிற அணுசக்திப் பொருள் வேறானது. பொதுவில் செறிவேற்றப்பட்ட யுரேனியம் சப்மரீனின் அணு உலையில் இடம்பெறும். இந்தியா இதையும் தயாரிக்க வேண்டி வந்தது.
அணுசக்தி சப்மரீனில் உள்ள அணு உலையில் செறிவேற்றப்பட்ட யுரேனியப் பொருள் கடும் வெப்பத்தை வெளியிடும்.இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நீராவி ஒரு டர்பைனை இயக்கும். இதன் பலனாக சப்மரீனில் சுழலி இயங்க சப்மரீன் நீருக்குள் இயங்கும். அத்துடன் இந்த டர்பைன் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதால் அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி சப்மரீனில் கடல் நீரைக் குடிநீராக்க முடியும். சப்மரீனுக்குள் இருக்கும் காற்றைச் சுத்திகரிக்க இயலும்.சப்மரீனுக்கான அணு உலை எடை மிக்கது. ஆகவே சப்மரீனில் ஸ்திர நிலை பாதிக்கப்படாத வகையில் அணு உலை சப்மரீனில் நடுப்பகுதியில் இடம்பெறும். அந்தவகையில் சப்மரீன் வடிவமைக்கப்படுகிறது. இந்தியா இது தொடர்பான பிரச்னையை வெற்றிகரமாகச் சமாளித்தது. இப்போது இந்திய அணுசக்தி சப்மரீனில் இடம்பெறும் அணு உலை கல்பாக்கத்தில் உருவாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சப்மரீனைக் கட்டுவதற்கான விசேஷ வகை உருக்கைப் பெறுவதிலும் இந்தியாவுக்குப் பிரச்னை ஏற்பட்டது.எல்லா வகை சப்மரீன்களிலும் ஒருவகை சோனார் கருவிகள் உண்டு. இவை ஒலி அலைகளை வெளிப்படுத்தும். இந்த ஒலி அலைகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள சப்மரீன்கள் மீது பட்டு எதிரொலித்துத் திரும்புவதை வைத்து அந்த சப்மரீன்களைக் கண்டுபிடித்து விட முடியும்.


எதிரி சப்மரீனின் சோனார் கருவிகளை ஏமாற்றும் வகையில் இந்திய சப்மரீனின் வெளிப்புறத்தில் நுண்ணிய துளைகள் கொண்ட ரப்பர் பொருள் ஒரு பூச்சாக அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே இந்திய அணுசக்தி சப்மரீனை எதிரி சப்மரீன்களால் எளிதில் அடையாளம் காண முடியாது.இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரிக்கும் திட்டம் நீண்ட காலம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இப்போதுதான் இந்த சப்மரீன் பற்றிய தகவல்கள் வெளியே தெரிய வந்துள்ளன.இந்தியாவின் டீசல் - எலக்ட்ரிக் சப்மரீன்களால் அதிக தொலைவு செல்ல இயலாது என்ற காரணத்தால் அவை இந்தியக் கடலோரப் பகுதிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன. இப்போது இந்தியா உருவாக்கியுள்ள அணுசக்தி சப்மரீன் உலகின் எந்த மூலைக்கும் செல்லக்கூடியது.


இதுபோன்று மேலும் பல அணுசக்தி சப்மரீன்களைக் கட்டுவதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது. இவையும் கடலில் இயங்க ஆரம்பித்ததும் எந்த நாடும் இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயங்கும்.எந்த ஒரு சிறிய பொருளாக இருந்தாலும் சரி, எந்தவிதத் தொழில் நுட்பமாக இருந்தாலும் சரி, அது அணுசக்தி தொடர்பான பணிக்குப் பயன்படுத்தப்படலாம் என்றால் அதை யாரும் இந்தியாவுக்கு வழங்கக்கூடாது என அமெரிக்கா விதித்த தடை (இந்தியா - அமெரிக்கா அணுசக்தி உடன்பாடு கடந்த ஆண்டில் கையெழுத்தானது வரையில்) அமலில் இருந்த காரணத்தால் அணுசக்தி சப்மரீன் தொடர்பாக வெளிநாடுகளிலிருந்து பல பொருள்களை காசு கொடுத்தாலும் வாங்க முடியாது என்ற நிலை இருந்தது.


இப்படியான பல பிரச்னைகளைச் சமாளித்துத்தான் இந்தியா அணுசக்தி சப்மரீனைத் தயாரித்துள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

0 மறுமொழிகள் to இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் !!! :