எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!!

தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு.

எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எடிசனுக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மற்றும் வணிகர் ஏசி (Alternate Current) என்ற மின்சாரத்தை உருவாக்கினார். தனது லாபில் இருவகை மின்சாரத்தையும் சோதித்த எடிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்டிங்ஹவுசின் மின்சாரம் எடிசனின் மின்சாரத்தை விட சக்தி வாய்ந்தது என்பதே முடிவு. அந்த மின்சாரத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அதையே பயன்படுத்த முடிவு செய்தார் எடிசன்.


பத்திரிக்கையாளரை கூப்பிட்டு அவர்கள் முன் ஒரு இரும்பு நாற்காலியை போட்டார் எடிசன். அதில் ஒரு பூனையை உட்கார வைத்து கட்டினார். அப்புறம் அந்த நாற்காலியில் தனது டிசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை 10-20 நிமிடம் துடிதுடித்து செத்தது. அப்புறம் மீண்டும் ஒரு பூனையை உட்கார வைத்து வெஸ்டிங்ஹவுஸின் ஏசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை இரண்டு வினாடிகளில் செத்துவிட்டது.


வெஸ்டிங்ஹவுஸ்
"பார்த்தீர்களா? எனது மின்சாரம் பட்டால் உடனடியாக சாகமாட்டார்கள். பிழைத்துவிடுவார்கள். ஆனால் வெஸ்டிங்ஹவுஸின் மின்சாரம் உடலில் பட்டால் உடனடி மரணம்தான். எனவே எனது மின்சாரமே பாதுகாப்பானது" என பிரச்சாரம் செய்தார் எடிசன். செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
அப்புறம் எடிசனின் மூளையில் இன்னொரு ஐடியா வந்தது. அப்போதெல்லாம் கொடும் குற்றவாளிகளை கில்லட்டின் வைத்து தலையை வெட்டிக்கொன்று கொண்டிருந்தார்கள். அதற்கு பதில், தான் தயாரித்த மின்சார நாற்காலியில் வெஸ்டிங்ஹவுசின் மின்சாரத்தை ஏற்றி அவர்களை கொல்லலாம் என ஐடியா கொடுத்தார் எடிசன். அத‌ற்கேற்றாற்போல் மின்சார நாற்காலிகளை தயாரித்து அரசிடம் விற்றும் விட்டார். இதனால் வெஸ்டிங்ஹவுசின் ஏசி மின்சாரத்துக்கு அப்போதெல்லாம் பயங்கர கெட்ட பெயர் உண்டாகிவிட்டது. மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொல்வதை அப்போதெல்லாம் Westinghoused என அழைப்பார்கள்.ஆனால் மின்சார நாற்காலியில் மரணம் என்பது வலியற்ற மரணம் கிடையாது. முதலில் 2000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி அதிர்ச்சி கொடுப்பார்கள். சுயநினைவு தப்பியவுடன் 5000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி உடலின் உள்பாகங்களை எரிப்பார்கள். அப்போது கண்விழி வெளியே வந்து விழுவதெல்லாம் உண்டு. அப்போது சுயநினைவு இருக்கிறதா இல்லையா என்பது அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்களுக்குதான் தெரியும். அதனால் இப்போதெல்லாம் விஷ ஊசி போட்டு அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

0 மறுமொழிகள் to எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!! :