ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். ஒரு நாள் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் எழுதுவதற்காக தரையில் பரப்பி வைத்திருந்த மணலை அள்ளி சிரியர் கண்ணில் வீசிவிட்டு சிட்டாய் பறந்துவிட்டார். அவருடைய தந்தை எத்தனை முயன்றும் நம் எதிர்கால விஞ்ஞானிக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் போய்த்தொலை என்று தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு காவலனாக இருக்கச் செய்தார்.
எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.
ஒன்றரை ஆண்டுக் காலமாக உள்ளே பூட்டிக் கிடந்த துப்பாக்கி ஒன்று வேலை செய்கிறதா என்று சோதிக்க விரும்பிய ஜி . டி . நாயுடு , ஒரு வாழை மரத்தின் அடிப்பாகத்தில் குறி பார்த்துச் சுட்டார் . குண்டு,வாழை மரத்தைத் துளைத்துக்கொண்டு மறு பக்கம் போய் விழுந்தது .
வாழை மரத்தில் விழுந்த துளை நாயுடுவின் சிந்தனையைத் தூண்டியது . உடனே ரொட்டிகளைக் கொண்டு வரச் சொல்லி , அந்தத் துளையில் அடைத்தார் . மேலும் சில வாழைகளைத் துளைத்து ஒன்றில் சாணம் , இன்னொன்றில் கோமியம் , மற்றொன்றில் மாமிசம் இவற்றைத் திணித்து அந்த வாழை மரங்களின் வளர்ச்சியில் ஏதேனும் மாறுதல் காண்கிறதா என்று கண்காணித்து வந்தார் . மரங்களும் , காய்களும் இரண்டு மடங்கு பெரிதாக வளர்ந்தன .
எதேச்சையான ஆராய்ச்சி எதிர்பாராத பலனை அளிக்கவே , நாயுடு தமது ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து , ஆரஞ்சு , பப்பாளி , பருத்தி போன்ற செடிகளையும் சோதனைக்கு உள்ளாக்கினார் . அதன் விளைவு : ' உலகிலேயே மிகச் சிறந்த பப்பாளி விளைவிக்கும்
செப்பிடு வித்தைக்காரர் நாயுடு என்ற புகழ் அவருக்குக் கிட்டியது . ஜி . டி . நாயுடுவைச் சந்திக்கச் செல்கிறவர்கள் ,
அவர் தோட்டத்தில் விளையும் பப்பாளியைச் சாப்பிடாமல் தப்ப முடியாது .
எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.
தாவர இயல் , பொறி இயல் , மருத்துவம் , சோதிடம் இவ்வளவையும் அறிந்துள்ள நாயுடுவின் முழுப் பெயர் துரைசாமி . இவரை , ' இலக்கண துரைசாமி ' , ' மருத்துவ துரைசாமி ' , ' சோதிட துரைசாமி ' என்றும் அழைப்பதுண்டு . ஆயினும் சோதிடத்தில் இவருக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது .
ஜி . டி . நாயுடு ஆங்கிலம் அதிகம் படித்தவரில்லை . ஆனாலும் , பல முறை உலக நாடுகளைச் சுற்றியதன் மூலம் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும் , உரையாடவும் அனுபவம் பெற்றுள்ள இவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்டு வியக்காதவர்களே இல்லை .
பல ஆண்டுகளுக்கு முன் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட ' எலெக்ட்ரிக் ஸேஃப்டி ரேஸர் ' மேனாட்டு விஞ்ஞானிகள் பலரால் பாராட்டப்பட்டது
வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.
இளம் வயதிலிருந்தே சிந்திக்கும் ஆற்றல், அயரா உழைப்பு, சுய முயற்சி என்பவற்றில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.
சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார்.
அப்போது முதல் உலகப்போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே லட்சத்து ஐம்பதினாயிரம் சேர்த்து திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.
அவரையும் பேராசைப் பேய் பிடித்துக்கொள்ளவே அதிகப் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களின் தில்லுமுல்லுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து வெறுங்கையுடன் ஊர் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பஸ் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார்.
அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அவரை ஒரு சாதாரண தொழிலாளராக அமர்த்திக்கொள்ள விரும்பவில்லை.
தாமாகவே முன்வந்து ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும். ஆனால், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.
முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கியவர் நாயுடுதான்.
தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று இன்றிருக்கும் வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு!
முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்!
இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக் கழக படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.
மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.
எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.
அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.
புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.
நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் பேடண்ட் உரிமையை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார்.
ஆனால் அந்நாட்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டன. அன்று நாட்டை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களின் தூண்டுதலே இதற்கு காரணமாயிருந்தது. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகள் பேடண்ட் செய்ய முடியாமலே போய்விட்டன.
ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்துலட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.
அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’
இவ்வாதம் இக்காலத்திற்கு ஒவ்வாததாக தோன்றினாலும் அன்று நாட்டை ஆண்டுவந்தவர் ஆங்கிலேயர் என்பதைக் கருத்தில் கொண்டால் அவருடைய முடிவில் தவறேதுமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.
நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.
எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.
அதே சமயம் நன்கொடை அளிப்பதில் இணையற்றவராக தோன்றினார். 1938ம் வருடம் பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.
தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.
அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.
இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார். அமைதியும் அடக்கமும் தன் தந்தையிடமிருந்து படித்தவர் இவர்.
நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.
இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.
அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.
விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!
அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.
அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.
நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பாராட்டாத தலைவர்களே இல்லையெனலாம்.
‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.
‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அண்ணா.
'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர்.சி.வி.ராமன்.
ஜி.டி. நாயுடு கற்றவருக்கு மேதை. கல்லாதவருக்கு புதிர். ஆற்றல் மிக்க அவர் அறிவியலையே தன் வாழ்க்கை என்று கருதினார்.
உழைப்பையே நம்பி ஊக்கத்தை உதறிவிடாமல் சுய முயற்சி, அயாரா உழைப்பு என்பவற்றை மட்டுமே நம்பி கோவை மக்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புகழ்ந்து பாராட்டும் வகையில் தன் வாழ்க்கையில் பிரகாசித்தவர் நம் ஜி.டி. நாயுடு.
அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!
நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
Tweet |
17 மறுமொழிகள் to அதிசய மனிதர் !!!! :
வணக்கம் சங்கர்.ஜி.டி நாயுடுவைப் பற்றி[அவர் பெயரைத் தவிர]எதுவுமே தெரியாத எனக்கு இவ்வளவு தகவல்களை அறிய கொடுத்தமைக்கு மிக்க நன்றி.ஆச்சரியமான விஷயங்கள்தான்.இதையெல்லாம் படிக்கும் போது இவ்வளவு நாட்கள் இதையெல்லாம் ’மிஸ்’ பண்ணி விட்டோமே என்ற வருத்தம் உண்டாகிறது.
hi shankar,
im from malaysia. so enaku inthe vishayanggal romba putusa irukku. anyway thanks pa.inthe mathiri innum niraiye puthu vishayanggal enggaluku kidaike ninggal uthavanum.
unggal muyarchiyil engalin inbam.. nandri..
nice work shankar.niraiya thakavalkalai pathivu saithuirukirrkal.keep it up
அட சும்மா சொல்லக் கூடாதுங்க ரொம்பவே கலக்கிட்டீங்க தொடர்ந்து எழுதுங்க !!
வாழ்த்துக்கள்.
Wow very interesting Shankar.
இவளவு சிறப்பு வாய்ந்த மனிதர்களும் நமது நாட்டில் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது . மிகவும் பெருமையாகத்தான் உள்ளது
இப்படியும் ஒருவரா!
நாயுடு பற்றி நான் கேள்விப்படாத பல விஷயங்களை கூறியுள்ளீர்கள்; அருமை...
எங்கள் நிறுவனத்தின் தலைமையகம் ஜெர்மனியில் உள்ளது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஜி.டி. நாயுடுவைப் பெற்றதாலேயே நம் நாட்டை அவர்கள் மிகவும் மதிக்கின்றனர். அவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அதிகம் விசாரிக்கும் போது, அவர் யார் என்றே தெரியாத அறியாமை அவர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.? இது எவ்வளவு கேவலமான நிலை. அவர் ஒரு மாமனிதர். அவரின் மியுசியதிற்கு நான் ஒரு முறை சென்றுள்ளேன். ஜேர்மாநியர்கள் சாமானியமாக யாரையும் பாராட்ட மாட்டார்கள்.அவர்களே ஏன் அவரை இப்படிப் போற்றுகிறார்கள் என்று அப்போது தான் புரிந்தது. அளப்பரிய கண்டுபிடிப்புகள்.அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. ஒருவர் வாழும்போதே அவரின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் பண்பு இனியாவது நம் நாட்டுக்கு வர வேண்டும்.நன்றி..
தொடர்ந்து எழுதுங்க தல.. நாங்க இருக்கோம்...
நல்ல தகவல் நண்பா இது போல இன்னும் எத்தனையோ தலைவர்கள் விஞ்ஞானிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்னும் மக்கள் மத்தியில் அறியப்படாமலேயை இருக்கின்றார்கள்
முடிந்தவரை வெளிக்கொண்டு வாருங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
ஜி.டி.நாயுடு வை பற்றி கௌண்டமணி பல படங்களில் சொல்வார்..
அவரை பற்றி அவ்வளவுதான் எனக்கு தெரிந்திருந்தது...
அவரை பற்றிய வியக்கத்தக்க கருத்தை கூறியதற்கு நன்றி...
கருத்து சிதறலை ஊகுவித்ததற்கும் நன்றி..
//ஜி.டி.நாயுடு வை பற்றி கௌண்டமணி பல படங்களில் சொல்வார்..அவரை பற்றி அவ்வளவுதான் எனக்கு தெரிந்திருந்தது...அவரை பற்றிய வியக்கத்தக்க கருத்தை கூறியதற்கு நன்றி...//
வார்த்தைக்காக சொல்லலை, நான் நினைத்ததை நாடோடித்தோழன் சொல்லியிருக்கிறார். நன்றி நாடோடித்தோழன் சார்.
மிகவும் பலனுள்ள சிறப்பான கட்டுரை.
சகோதரரே!
பள்ளிப்பருவத்தில் படிப்பில் கவனம் சிதறிய சராசரி மாணவனாகத்தான் திரிந்தேன். 'ஜி. டி. நாயுடு' என்ற தமிழக விஞ்ஞானியின் கண்டுபிடிப்புகள் சில பற்றி அறிந்தபோதுதான்... திடுதிப்பென்று படிப்பில் பெரிதும் ஆர்வமானேன். இது சத்தியமான வார்த்தை!
இந்த அதிசயத் தூண்டுதலால்தான்... அன்றைய (1967) ஒன்பதாம் வகுப்பில் "எலெக்டிவ் சப்ஜெக்ட்" தேர்ந்தெடுக்க நேர்ந்தபோது, சக மாணவர்கள் 'கால்குலேஷன் சயன்ஸ்' 'இரட்டை விபரீதங்கள்' என்று சேர பயந்த பெளதீகத்தையே நான் விரும்பி எடுத்தேன். (பெரும்பான்மையோர் சரித்திரத்திலும், சிலர் அறிவியல் பாடத்திலும் சேர்ந்தனர்.) நம்புங்கள்... 'ஃபிஸிக்ஸ்' வகுப்பில் இருந்த மொத்த மாணவர்களே ஏழு பேர்தான்.
என் பெயருக்குப்பின் எம். எஸ். ஸி. (ஃபிஸிக்ஸ்); பி. எச். டி; என எழுதி எழுதியே பரவசமடைந்தேன். 1970-ல் எஸ். எஸ். எல். ஸி. தேர்வில் தேறியபோது... பெளதீகத்தில் நான் எடுத்த மார்க்குகள் 100க்கு 45 மட்டுமே. நான் சேர்ந்திருந்த இனம் (நண்பர்கள்) தரமற்றதாய் இருந்ததால், ஆர்வமிருந்த அளவுக்கு என்னால் படிப்பில் சாதனைபுரிய இயலவில்லை.
பின்னர், நான் வாழ்க்கையில் விழுந்து விழுந்துப் போராடும்போதெல்லாம்... பொங்கி எழும் பெளதீக அறிவே என்னுடன் இணைந்து உழைக்கின்றது. என் ஆழ்மன ஆர்வத்திற்கு ஆரம்பமாயிருந்த மாமேதை ஜி. டி. நாயுடு அவர்களுக்கு என் நன்றி.
தாங்கள் எழுதியுள்ள, ஜி. டி. நாயுடு அவர்களின் கஷ்ட நஷ்ட விபரங்களை நான் அன்று அறிந்திருக்கவில்லை. படிக்கும்போதே கண்கள் பணித்தது. தங்களுக்கும் என் நன்றி.
-கடலூர் கவுஸ்
Pls write Tippusuldan history!....
Please write Tippusuldan history!....
Please write Tippusuldan history!....
Post a Comment